உணவு டெலிவரி செய்ய Google Map உதவியை நாடிய இளைஞர்.., கடைசியில் நடந்த சம்பவம்
Google Map உதவியுடன் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் சேற்றில் சிக்கியுள்ளார்.
Google Map உதவியுடன் சென்ற இளைஞர்
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.
அவர், அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, Google Map உதவியுடன் வாடிக்கையாளர் வீட்டிற்கு பவுன்ராஜ் சென்றுள்ளார்.
இருள் சூழ்ந்த பகுதியை மேப்பில் காட்டியதால் அங்கு அவசரமாக சென்ற இளைஞர், சதுப்பு நில சேற்றில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி கொண்டார். அப்போது அவரால் அங்கிருந்து வெளிவர முடியாததால் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
ஆனால், அங்கு யாரும் வராததால் 112 என்ற கட்டுப்பாடு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், அவர்களுக்கு செல்போனில் இருந்து இருப்பிட லொகேஷன் அனுப்பினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இளைஞரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.