;
Athirady Tamil News

இஸ்ரேல் தூதரகம் தொடர்பில் ஜேர்மனியில் கைதான லிபியா நாட்டவர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

0

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் லிபியா நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்

கைதான நபருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Bild நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், பெர்லினுக்கு வடக்கே பெர்னாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடியாக நுழைந்த பொலிஸ் கமாண்டோக்கள் 28 வயது நபரை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று அளித்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே ஜேர்மன் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் Bild நாளேடு குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த நபர் ஜேர்மன் உளவு அமைப்புகளின் கண்காணிப்பு வட்டத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.

அந்த நபர் பெர்லினில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாகவும், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உமர் என மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் ஞாயிறன்று நீதிபதி முன்பு நிறுத்தப்படுவார். இந்த நிலையில் ஜேர்மனிக்கான இஸ்ரேல் தூதர் Ron Prosor ஜேர்மன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு அதிகரிப்பு

அக்டோபர் தொடக்கத்தில் கோபன்ஹேகன் மற்றும் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் – காஸா போருக்கு பின்னர் உலகின் பல நாடுகளைப் போல ஜேர்மன் அதிகாரிகளும் தீவிரவாத போராளிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் யூத-விரோத போக்குக்கு எதிராக தங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

செப்டம்பர் தொடக்கத்தில், இஸ்ரேலிய துணைத் தூதரகம் மற்றும் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை முனிச் பொலிசார் சுட்டுக் கொன்றனர். அந்த இளைஞருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருந்ததாக கூறப்பட்டது.

ஜேர்மனியில் இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் 3,200 க்கும் மேற்பட்ட யூத-எதிர்ப்பு தூண்டுதலால் ஏற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இருமடங்கு என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.