சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன்தினம் (அக். 20) வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிஆா்பிஎஃப் பள்ளியின் சுவா், அதன் அருகில் உள்ள கடைகள், காா் ஆகியவை சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த வெடிவிபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, சிஆர்பிஎஃப், தேசிய பாதுகாப்புப் படை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய முழுவதும் இருக்கும் சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, தில்லியில் வெடிகுண்டு வெடித்த பள்ளி உள்பட 2 பள்ளிகளுக்கும், ஹைதராபாத்தில் ஒரு பள்ளிக்கும் தனித்தனியே இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளிக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தில்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் இருக்கும் சிஆர்பிஎஃப் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு தொடர்பான சோதனையில் அந்த அச்சுறுத்தல்கள் போலியானது என தெரிய வந்துள்ளது. ஆனால், அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக 100 -க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (அக். 21) ஒரு நாளில் மட்டும் 30 விமானங்களுக்கும், இன்று 10 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
மக்களின் பாதுகாப்பு ஒன்றே அரசிற்கு முக்கியம் என்றும் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களை விமானங்களில் பறப்பதற்கான தடை பட்டியலில் சேர்க்க விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று தெரிவித்தார்.