2 பெரிய பாறையின் நடுவே தலைகீழாக சிக்கிய பெண்: செல்போனுக்காக உயிரை ஆபத்தில் வைத்த சம்பவம்!
அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாறைகளுக்கு இடையே சிக்கி கொண்ட பெண்
நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில்(Hunter Valley) உள்ள இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே இளம்பெண் ஒருவர் தலைகீழாக சிக்கிக் கொண்டார்.
தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது 500 கிலோ எடையுள்ள பெரிய இரண்டு பாறைகளின் இடுக்கில் 7 மணி நேரமாக சிக்கிக் கொண்டு தவித்துள்ளார்.
சிக்கலில் சிக்கிய பெண்ணை அவரது நண்பர் விடுவிக்க முயன்ற நிலையில் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து அவசர சேவைகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்த மீட்பு குழுவினர்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், பிரம்மாண்ட பாறைகளை அகற்றி அந்த பெண் வெளியேற ஏதுவான வழியை உருவாக்க கடுமையாக உழைத்தனர்.
கிட்டத்தட்ட 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த பெண்ணை குறுகிய, S வடிவ இடைவெளியின் வழியாக கவனமாக வெளியே எடுத்தனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் அந்த பெண்ணின் செல்போன் பாறைகளின் கீழே புதைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.