வாழ்க்கை வாழ்வதற்கான வலுவூட்டல் பயிற்சிவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறி
வாழ்க்கை வாழ்வதற்கான வலுவூட்டல் பயிற்சிவிப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறியின் (Life Coaching TOT) ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (22.10.2024) யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், ஒரு மனிதனுக்கு வளமான வாழ்க்கை இன்றியமையாதது எனவும், வாழ்க்கையினை மேம்படுத்துவதற்காகவும் மற்றவர்கள் வாழ்க்கையினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்கின்ற சமூகத்திற்காக பணியாற்றுவதற்காகவும், முன்வந்து இப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட பயிற்சியாளர் களைப் பாராட்டினார். மேலும் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான பயிற்சி நெறி என்றும், மாவட்டச் செயலக ரீதியாகவும் பிரதேச செயலக ரீதியாகவும் இப் பயிற்சி நெறியின் முக்கியத்துவத்தினை தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், வேலைப் பளுக்கள் நிறைந்த சமூகத்தில் சமூகப் பிரச்சனையினைத் தீர்க்க முனைப்புடன் வந்துள்ள பயிற்சியாளர்கள் குறித்து மகிழ்வடைவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வாழ்க்கையில் எவ்வாறு வாழ விரும்புகிறோமோ அவ்வாறு வாழ்வதற்கான வலுவூட்டலாக இப் பயிற்சி நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறியின் வளவாளராக இந்திய பயிற்றுவிப்பாளர் சீதாலக்ஸ்மி சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இப் பயிற்சி நெறியினை மாவட்டச் செயலகமும் மனிதவள பயிற்சி நிபுணத்துவ நிலையம் மற்றும் நிபுணத்துவ நிலையமும் (HRTC – மட்டக்களப்பு) இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளது.
இப் பயிற்சி நெறியில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர்களாக அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக, பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.