மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது அநுர அரசின் பொறுப்பு; நாமல் ராஜபக்ஷ
போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலிப் பயங்கரவாதிகள், டயஸ்போராக்களாக இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றதாகவும் நாமல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குரோத அரசியலில் ஈடுபட நாம் தயாரில்லை
அதேபோல் உலகளவில் அடிப்படைவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிராதம் தலைதூக்கியுள்ளன. இவற்றுக்கு எதிராகப் போராடி, போரை முடித்த தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கடப்பாடாகும் எனவும் நாமல் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதேவேளை, எமது அரசியல் முகாம்தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது.
எனவே, நாட்டை வீழ்துவதற்குரிய குரோத அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை. உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ராஜபக்ஷக்கள் சட்டவிரோதமாக எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அவற்றைக் கொண்டு வாருங்கள்.
அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.