இரண்டரை வருடத்தில் ஒரு கோடி மக்கள் தொகையை இழந்த நாடு : எது தெரியுமா !
உக்ரைனில் (Ukraine) கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை ஒரு கோடி அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவுடன் (Russia) உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது.
உக்ரைன் பிறப்பு விகிதம் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் நாடு என்ற ரீதியில் இங்கு சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை மாத்திரமே பிறக்கிறது அதாவது பிறப்பு விகிதம் ஒரு சதவீதம்.
மக்கள் தொகை
மக்கள் தொகையின் தற்போதைய சூழ்நிலையை பராமரிக்க, குறைந்தபட்ச பிறப்பு 2.1 சதவீதம் தேவைப்படுகின்ற நிலையில் பெப்ரவரி 2022 இல் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைனில் மக்கள் தொகை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கிழக்கு ஐரோப்பாவுக்கான ஐக்கிய நாடுகள் (United Nations) மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் புளோரன்ஸ் பாயர் (Florence Bauer) ஜெனீவாவில் (Geneva) இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் உக்ரைனில் பிறப்பு விகிதம் ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதைந்த பிறகு உருவான உக்ரைன், அப்போது ஐந்து கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், தற்போது உக்ரைனில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்ற நிலையில், உக்ரைனை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது.
ரஷ்யாவுடனான போர்
ரஷ்யாவுடனான போர் காரணமாக மக்கள் தொகை குறைவதற்கு பல காரணங்கள் உள்ள நிலையில் இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை அத்தோடு இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை குறைவதற்கு உக்ரைனில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்ததே மிகப்பெரிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது சுமார் 67 இலட்சம் உக்ரைனியர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் (Europe) தஞ்சம் அடைந்துள்ளதுடன் உக்ரைனில் உள்ள கிராமங்கள் காலியாக தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் முதியவர்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும், இளம் தலைமுறையினர் வேகமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதால் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.