இஸ்ரேலுக்கு பதிலடி திட்டம் : போருக்கு தயாரான ஈரான்
இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தினால் அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் (Iran) திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீது கடந்த முதலாம் திகதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்த நிலையில் சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.
இராணுவ முகாம்
இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் இராணுவம் தெரிவித்தது.
இருப்பினும், இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேல் தாக்குதல்
அத்தோடு, இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்த நிலையில் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் இராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி (Ali Khamenei) அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தினால் அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால் பதிலுக்கு ஈரான் இராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும் அதே சமயம் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.