10 -ம் வகுப்பில் பாஸ் ஆக இனி 20 மதிப்பெண்களே போதும்.., மகாராஷ்டிர அரசு முடிவு
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 20 மதிப்பெண்கள் போதும் என்ற முடிவை மகாராஷ்டிர அரசு எடுத்துள்ளது.
மகாராஷ்டிர அரசு முடிவு
இந்தியா முழுவதும் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் எடுப்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பான முடிவை மகாராஷ்டிர அரசு எடுத்துள்ளது. இம்மாநிலத்தில், பல மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்களை கூட எடுக்க முடியவில்லை என்பதால் தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்தவண்ணம் உள்ளது.
இதனால், 10 -ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கல்வியை கைவிடுகின்றனர். இந்த காரணத்தால் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சனையை சரிசெய்யும் நோக்கத்தில், 10 -ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண்களை 35-ல் இருந்து 20 ஆகக் குறைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால், இந்த மாணவர்கள் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளை படிக்க முடியாது. அதற்கு பதிலாக கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளை தொடரலாம்.
புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த முடிவிற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் வருகின்றன.