நவம்பர் 1ஆம் திகதி… பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?
பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை எல்லைக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது பிரான்ஸ்.
அடுத்த ஆண்டுவரை எல்லைக் கட்டுப்பாடுகள்
ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் எல்லைக்கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் ஐரோப்பிய ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
தற்போதுள்ள எல்லைக்கட்டுப்பாடுகள் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 1ஆம் திகதி, புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
எல்லைக் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?
பிரான்சின் எல்லைக் கட்டுப்பாடுகளால் பெல்ஜியம், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் பாதிப்பு ஏற்படும்.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற ஷெங்கன் பிராந்திய நாடுகளல்லாத நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வருவோருக்கு வழக்கமாகவே பாஸ்போர்ட் சோதனைகள் நடந்துவருவதால், அவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளால் எந்த வித்தியாசமும் தெரியாது.
ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகள் அல்லது 90 நாட்கள் விதிக்குட்பட்ட நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கும் பாஸ்போர்ட் ஸ்டாம்ப் செய்வதில் எந்த மாற்றமும் இருக்காது.
யாருக்கு மாற்றம்?
நிலம், கடல் மற்றும் விமானம் வழியாக பிரான்சுக்கு வரும் மேற்குறிப்பிட்டுள்ள பெல்ஜியம் முதலான ஆறு நாடுகளிலிருந்து வருவோர் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவார்கள்.
முக்கியமாக, கார் அல்லது பேருந்து மூலம் பிரான்சுக்குள் நுழைவோரே முக்கிய இலக்காக சோதனைக்குட்படுத்தப்பட இருக்கிறார்கள்.
முக்கியமாக, எல்லை கடந்து பிரான்சுக்கு வேலைக்கு வருவோர்தான் அதிகம் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
ஏதாவது கூடுதல் ஆவணங்கள் தேவையா?
ஷெங்கன் எல்லையைக் கடப்பதற்கு, பிரெஞ்சு அடையாள அட்டை, அல்லது ஐரோப்பிய நாடு ஒன்று வழங்கிய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் தேவை.
ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், இரட்டைக் குடியுரிமை இருந்தாலொழிய, தங்கள் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும்.
பிரான்சில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், தங்கள் பாஸ்போர்ட்டையும், பிரெஞ்சு குடியிருப்பு அனுமதியையும் எல்லை சோதனையின்போது காட்டவேண்டும். இதுதவிர, மற்ற ஷெங்கன் பிராந்திய விதிகளில் எந்த மாற்றமும் இருக்காது.