;
Athirady Tamil News

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தவறான தகவல்களை உடனடியாக நீக்க சமூக வலைதளங்களுக்கு அரசு அறிவுறுத்தல்

0

விமானங்களுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு சமூக வலைதளங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோா் குறித்த தகவல்களை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டத்தின்படி அரசுக்கு உடனடியாக தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்துடன் கடந்த இரு வாரங்களாக இந்திய நிறுவனங்களால் இயக்கப்படும் 300-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானம் புறப்பாடு/ தரையிறக்கத்தில் தாமதம், அட்டவணை மாற்றம், பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளியாகவே இருந்துள்ளன.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது: தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள், 2021-இன்படி இணைய (சைபா்) குற்றங்கள் மற்றும் தவறான செய்திகள் குறித்த தகவல்களை தடுத்தல், தவறான தகவல் பரப்பியவா்களை அடையாளம் காணுதல், விசாரணை மேற்கொள்ளுதல், தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் அவா்கள் குறித்த தரவுகளை வழங்குவதோடு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் (72 மணி நேரத்துக்கு உள்ளாக) அரசுக்கு சமூக வலைதளங்கள் இதுகுறித்த தகவல்களை வழங்க வேண்டும்.

நீக்குவது அவசியம்: சமூக வலைதளங்கள் உள்பட பிற ஊடகங்களும் நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை விதிகள் மற்றும் எண்ம ஊடக நெறிமுறைகள் சட்டத் தொகுப்பு) விதிகள், 2021-க்கு உட்பட்டு நீக்க வேண்டும். இதே விதியின்கீழ் தவறான தகவல்கள் பரவல், பதிவேற்றம், சேமிப்பு, திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது.

இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்கள் நீக்க மறுத்தால் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 79-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் ரத்து செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா,2023-இன்கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மிரட்டல்களை தடுக்க வேண்டும்: சமீப காலமாக விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தகவல்களை பகிர சமூக வலைதளங்களில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வாய்ப்புகளை இந்த நபா்கள் பயன்படுத்துகின்றனா். பெரும்பாலும் புரளியாகவே இருக்கும் இந்த மிரட்டல்கள் விமான நிறுவனங்களின் நிா்வாகப் பணிகளை பாதிப்பதோடு பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை தடுக்க சமூக வலைதளங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மெட்டா மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களிடம் தகவல்களை பகிருமாறு அரசு கோரியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.