வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க அந்த நாட்டிற்குச்சென்று மாகாண ஆளுநர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், அதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கை
அதன்படி, விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
எனவு வேலை தேடுபவர்கள் E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.