நீதிபதியுடன் வழக்கறிஞர் வாக்குவாதம்.. காவல்துறை எடுத்த முடிவு -நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஜாமின் தொடர்பாக நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகரில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நாஹர் சிங் என்ற வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது கட்சிக்காரரின் ஜாமின் வழக்கு தொடர்பான விசாரணை மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாமின் வழங்குவது தொடர்பாக நீதிபதியுடன் வாதாடுவதற்குப் பதிலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஏதோ ஊர் பஞ்சாயத்தில் பேசுவது போன்று நினைத்துக் கொண்ட அந்த வழக்கறிஞர், நீதிபதியிடம் தொடர்ந்து பேசி நீதிமன்றத்தின் மாண்பைச் சீர்குலைத்துள்ளார்.
இந்த கண்ட மற்ற வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடி, நீதிபதியிடம் சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நீதிபதி, காவலர்களை உள்ளே அழைத்துள்ளார். அப்போதும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து வரம்பு மீறி நடந்துள்ளனர்.
வாக்குவாதம்
இதையடுத்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்ற முயன்ற போது அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் உள்ள நாற்காலியை எடுத்து விரட்டியடித்தனர். இதனால் காவல்துறை தடியடி நடத்தினர்.இந்த சம்பவத்தில் வழக்கறிஞர்களுக்கு முதுகு, கை, கால்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையின் தடியடியைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிபதி மற்றும் காவல்துறைக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நீதிபதியுடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர்களை, காவல்துறை தடியடி நடத்தி விரட்டியடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.