தீபாவளி பண்டிகை: சேலம் மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து வயதினரும் புத்தாடைகள் அணிந்து தங்களுடைய வீடுகளுக்கு முன்பாக பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் சேலம் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சாலைகளில் தோறும் பட்டாசு குப்பைகள், பட்டாசு வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள், நெகிழி கழிவுகள் மலை போல் குவிந்து காணப்பட்டன.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த பட்டாசு குப்பைகள், நெகிழிகள் என அனைத்து விதமான குப்பைகளும் அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பட்டாசு கழிவுகளால் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில் சேலம் மாநகர் முழுவதும் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 150 டன் குப்பைகள் தேங்கும். இந்த நிலையில் வழக்கமான குப்பைகளை விட தீபாவளிக்கு வெடித்த பட்டாசு குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் என இதுவரை 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக வெள்ளிக்கிழமை 250 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.