நல்லூரில் கந்தசஷ்டி விசேட பூஜை வழிபாடுகள்
கந்த சஷ்டி விரதம் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் , 10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெறவுள்ளது.
சாயரட்சை பூஜை மாலை 3.45 மணிக்கும் , 2ஆம் காலசந்தி பூஜை 4 மணிக்கும் தொடர்ந்து 4.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் இடம்பெற்று முருகப்பெருமான் வெளிவீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்.
எதிர்வரும் 07ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சூரசம்ஹார உற்சவமும் மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளது.
அதேவேளை சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் கந்த சஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும் போது பஜனை இடம்பெற்று வருகின்றது.
இப்பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தப் பெருமானின் திருவருளைப் பெற்றேகுமாறு மாணவர்களுக்கும், முருகப்பெருமான் அடியவர்களுக்கும் சிவகுரு ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.