;
Athirady Tamil News

பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை

0

பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை. நாங்கள் சலுகை தேவை என கேட்கவில்லை. பெண்கள் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதே எம் கோரிக்கை என தமிழர் விடுதலை கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் இருப்பும் பொருளாதார இருப்பும் என்பதே எமது பிரதான கொள்கையாக கொண்டு இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறோம். தமிழர் இருப்பினை தக்க வைக்க பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பொருளாதர அபிவிருத்தியை தேடியே நிறைய இளைஞர்கள் யுவதிகள் நாட்டில் இருந்து புலம்பெயர்கின்றனர். எனவே தான் இரண்டையும் சேர்ந்தே கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை 50 வீதம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆயுத போராட்ட காலத்தில் கூட 50 சத வீத பெண்களின் பங்களிப்பு இருந்த நிலையில் , அரசியலில் ஏன் இல்லாமல் போனது ? இது மிக மனவேதனைக்குரிய விடயமாகும்.
53 சத வீத பெண்கள் இருக்கும் போது, பெண் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது ?

இந்த நிலையில் தான் தமிழர் விடுதலை கூட்டணியினர் , பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறேன்.

ஐம்பது சத வீத பெண்களின் பங்களிப்பு , மனநல பாதுகாப்பு , இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவித் தொகையை வழங்கல் , தகவல் தொழிநுட்ப பூங்காவை உருவாக்குதல் , நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதலுக்கான உறுதிப்பாடு என 20 அம்சங்களை “கௌரி காப்பு ” என முன் வைத்தே தேர்தலில் போட்டியிடுகிறேன்.

காடுமேடெல்லாம் திரிந்து தான் பெண்களை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறிய விடயம் பெண்களை அவமதிக்கும் செயற்பாடாகவே அமைந்தது. அந்த நிலையில் தான் தமிழர் விடுதலை கூட்டணியினர் பெண்களை முன்னிலைப்படுத்தி என்னை அழைத்த போது , நானும் அரசியலுக்கு வர மறுத்தால் , பெண்களை அவமானப்படுத்தும் செயலுக்கு நானும் ஒரு பங்காளியாகி விடுவேன். அவ்வாறு இருக்க கூடாது என்பதற்காவே அரசியலுக்குள் வந்தேன்

அதற்காக பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை. பல திட்டங்களை முன்னரே செய்துள்ளேன் தொடர்ந்தும் எமது திட்டங்களை நடைமுறைப்படுத்தவே உங்களின் ஆணையை கேட்டு நிற்கிறேன். பெண்களுக்கு சலுகை தேவை என கேட்கவில்லை. சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதே எம் கோரிக்கை.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து எனது இலக்கமான 04ஆம் இலக்கத்திற்கு விருப்பு வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.