;
Athirady Tamil News

தேர்தல் பிரசாரங்களின் போது விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

தேர்தல்கள் பிரசாரங்களின்போது, விநியோகிக்கப்படும், உணவு மற்றும் பானங்கள் தொடர்பில், தேர்தல் சட்டத்தில் உள்ள விதிகள் வேட்பாளர்களுக்கு கணிசமான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்காளர்களுக்கு தண்ணீர் போத்தல் மற்றும் குளிர்பானம் போன்ற சாதாரணப் பொருட்களைக் கூட வழங்குவது, தேர்தல் சட்டத்தின்படி, கையூட்டலாக கருதப்படுவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்க அல்லது வாக்களிக்காமல் இருக்க, அல்லது வாக்களிப்பை தவிர்க்க, தேர்தலுக்கு முன்னர், அல்லது தேர்தலின்போது அல்லது அதற்குப் பின்னர், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறைச்சி, பானம், அல்லது சிற்றுண்டி போன்றவற்றை வழங்கல் அல்லது பணம் வழங்கல் அல்லது அதற்கு துணையாக இருப்பது குற்றமாகும்.

உரிய நடவடிக்கை

இந்தநிலையில், அண்மைய நாட்களில், சில வேட்பாளர்கள் தங்கள் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு ஏற்பாடு செய்த விருந்துகளை தேர்தல் ஆணையம் தடுத்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இது தொடர்பாக கருத்துரைத்துள்ள தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க, சில சந்தர்ப்பங்களில், வேட்பாளர்கள் தங்கள் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு சிக்கன் ரோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளை வழங்குவதற்கு அனுமதி கோருகிறார்கள், ஆனால் அது சட்டத்தின் அடிப்படையில் இலஞ்சமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்படி மாத்திரமே தாம் செயற்படமுடியும், தண்ணீர் போத்தல் வழங்குவதைக் கூட இந்த முறையில் இலஞ்சமாக கருதலாம். எனவே முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் இருப்பதாக ஆணையகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வாக்குகளை விலைக்கு வாங்கும் நோக்கில் இவ்வாறான சிற்றுண்டி அல்லது உணவு வழங்கப்படுவது நீதிமன்றில் நிரூபிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.