அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கேவிற்கு வாக்களித்து அவர் ஜனாதிபதியாகி இருந்தால், அழிவுகள் ஏற்பட்டு இருக்காது. பலர் அவர் நரித்தனம் உடையவர் என நினைக்கின்றார்கள். அரசியலில் நரித்தனம் இருப்பதனை பிழை என்று நாங்கள் நினைக்கவில்லை. நரித்தனமான குணத்தில் இருந்ததையால் தான் குறுகிய காலத்தில் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டவர்.
இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் நின்ற பலர் தங்கள் சுயநலத்திற்காக பிரிந்து சென்றுள்ளனர். இப்ப கூட ஜேவிபி யினர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த வேலை திட்டங்களையே தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றனர். அவர்களால் புதிய வேலை திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.
இன்றைக்கு முட்டை விலை , அரிசி விலை , தேங்காய் விலை என்பன கூடியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவால் குறைக்கப்பட்ட விலைகள் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. இப்படியே சென்று இந்த ஆட்சி இன்னும் 06 மாத காலப்பகுதிக்குள் கவிழ்ந்து விடும்.
மக்களின் அத்தியாவசிய பொருளான அரிசியின் விலையை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. முட்டையின் விலையை குறைப்பதாக இருந்தால் கோழிகளுக்கான தீனியின் விலையை முதலில் குறைக்க வேண்டும். தீனி விலையை குறைக்காது முட்டை விலையை குறைக்க முடியாது.
மக்கள் எதிர்பார்த்தது அனுபவ அரசியலை. ஜேவிபி க்கு வந்தது ஒரு அலை. அந்த அலை இப்ப இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் ஜனாதிபதி தற்போது பிரச்சாரங்களுக்கு ஓடுகிறார்
ஜனாதிபதி ஆகி ஒரு மாத காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.
கார் களவு எடுத்தவனையோ , உதிரி பாகங்களை கொண்டு வந்து காரை பொருத்தியவனையோ பிடிக்க பொலிஸ் போதும், அதற்கு ஏன் ஜனாதிபதி ?
அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது.
இரண்டு வருட கால பகுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு கூட பலதை செய்துள்ளார். பல ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள கையளித்துள்ளனர். அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி வீதி கூட ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியால் தான் விடுவிக்கப்பட்டது. ஒரே இரவில் காணி விடுவிப்பு சாத்தியம் இல்லை.
தற்போது வழங்கப்படும் கடவு சீட்டு ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் உதித்தது. தமிழ் மக்களின் கலாச்சாரங்கள் அதில் உள்ளடக்கியது கூட ரணில் விக்கிரமசிங்கவே என தெரிவித்தார்.