திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை!
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அக். 25 ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 45-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்ததில் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.
இதையடுத்து பள்ளியும் மூடப்பட்டது. 10 நாள்களுக்குப் பிறகு நேற்று (திங்கள்கிழமை) மறுபடியும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தொடர்ந்து பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பள்ளியின் ஆய்வகத்தில் இருந்து இந்த வாயு காசி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல, தனியார் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் கேஸ் நிறுவனம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனினும் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என சுற்றுச்சூழல் வாரியத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
நாளையும் இந்த ஆய்வு தொடரும், இந்த வார இறுதியில் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.