;
Athirady Tamil News

பிளஸ்டிக் டப்பாவில் ஆண் குழந்தை சடலம்: வீசிச் சென்றது யார்?

0

பேராவூரணி: பிறந்த ஆண் குழந்தையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட இடத்தில், பிறந்து ஒருசில நாள்களே ஆன ஆண் குழந்தையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தென்னந்தோப்பில் வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

சேதுபாவாசத்திரம் போலீஸ் சரகம் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் குணபாலன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை காலை பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் போலீசார் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பச்சிளங்குழந்தையை வீசிச் சென்ற கல்நெஞ்சர்களை தேடிவருகின்றனர்.

குழந்தைப்பேறுக்காக ஆயிரக்கணக்கானோர் ஏங்கித் தவமிருக்கையில் பிறந்த குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து, குழந்தையின் உடலைப் பார்த்தவர்கள் மனம் நொந்து புலம்பிச் சென்றனர்.

குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்ததா? அல்லது பிறந்த பிறகு குழந்தை இறந்ததா? இயற்கை மரணமா? கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உடல் கூறாய்வுக்குப் பிறகே உண்மை தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.