;
Athirady Tamil News

பதுளை விபத்து – சாரதியின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

0

பதுளை – துங்கிந்த பகுதியில் விபத்திற்குள்ளான பேருந்தினை செலுத்திய சாரதியின் அனுமதிப்பத்திரம், மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்து வாகனம் செலுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காலி அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுதுவ பிரதேசத்தில் மதுபோதையில் பேருந்தை செலுத்தி, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவரது சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவருக்கு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்
குறித்த சாரதியை கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி காலி மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, கைது செய்யப்பட்ட சாரதிக்கு 55,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, 5 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தப்பட்டதாக நீதிமன்றில் இன்று (05) தெரியவந்துள்ளது.

காலி அல்விட்டிகலவைச் சேர்ந்த சாரதி கட்டியர பிரவசன்ன குமார (41) என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றம், 2024 ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று இடைநிறுத்தியிருந்தது.

இந்த விபத்து தொடர்பில் அக்மீமன பொலிஸார் இன்று (05) காலி மேலதிக நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

உடுகம தம்மால பிரதேசத்தை சேர்ந்த சாரதி, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை தவறிவிட்டதாக ஹினிதும பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரண்டு மாணவிகள் உயிரிழப்பு

மேலும், தற்போது புதிதாக சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பதுளையில் இடம்பெற்ற கோர விபத்தின் பின்னர் அதே சாரதி அனுமதிப்பத்திரம் அவரிடம் இருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்ட காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகம, குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தை சாரதியிடம் விடுவிக்காமல் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சூரியவெவ வளாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்து கடந்த 1 ஆம் திகதி பதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்தவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.