அமரன் பட காட்சியால் மாணவர் அனுபவிக்கும் தொல்லை – சாய்பல்லவி என நினைத்து கால் செய்யும் ரசிகர்கள்
அமரன் பட காட்சியால் சென்னை மாணவருக்கு தினமும் 100க்கு மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
அமரன்
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
மொபைல் நம்பர்
இந்த படத்தில் சாய்பல்லவி மொபைல் நம்பரை ஒரு காகிதத்தில் எழுதி அதை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தற்போது இந்த காட்சியால் சென்னையை சேர்ந்த மாணவர் பெரும் தொல்லையை அனுபவித்து வருகிறார்.
இந்த காட்சியில் காட்டப்படும் மொபைல் நம்பர் சென்னையை சேர்ந்த வி.வி.வாகீசன் என்ற மாணவரின் எண் ஆகும். படம் வெளியானது முதல் அவரது போனுக்கு பல்வேறு அழைப்புகள் வர தொடங்கியுள்ளது. பலரும் சாய்பல்லவியிடம் பேசலாம் என்றும், அவரது நடிப்பை பாராட்டலாம் என்றும் நினைத்து அழைத்துள்ளனர்.
இதனையடுத்து, தீபாவளி இரவு அன்று செல்போனை மியூட் செய்துவிட்டார். மறுநாள் காலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிருந்தும் 100 க்கும் மேற்பட்ட அழைப்புகள், குறுந்செய்திகள், வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.
ட்ரூ காலர்
பலரும் இது மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் எண் என நினைத்து அழைத்துள்ளனர். மேலும் ட்ரூ காலர் செயலில் யாரோ ஒருவர் இந்த எண்ணை இந்து ரெபேக்கா வர்கீஸ் என சேவ் செய்து விட்டனர். இதனால் வரும் அழைப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் ஆகியோரை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
சைலெண்ட் மோட்
அழைப்புகள் தொடர்ந்து வருவதால் செல்போனை சைலெண்ட் மோடில் வைத்துள்ளார். இதனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் வரும் முக்கியமான அழைப்புகளை கூட தவற விடும் நிலை உள்ளது என வருத்தமடைந்துள்ளார்.
மேலும், இந்த எண்ணை 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், வங்கி கணக்கு கூட இந்த எண்ணை கொடுத்துள்ளதால் இந்த எண்ணை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார். ஆனால் மார்க்கெட்டிங் அழைப்புகளை தவிர மற்ற இன் கமிங் அழைப்புகளை ப்ளாக் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். வாகீசன் தற்போது வரை அமரன் படத்தை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.