ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல் : ஐரோப்பிய தலைவர்களின் அவசர கூட்டம்
அமெரிக்க (America) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவரது ஆட்சியால் எழவிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு கூட்டாக பதிலளிப்பது தொடர்பில் ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூட்டணி முறிவு உள்ளிட்ட அரசியல் சிக்கல்களால் ஜேர்மனி (Germany) குறித்த ஆலோசனை கூட்டத்தில், கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் பிரித்தானியா (Britain) முதல் துருக்கி (Turkiye) வரை, நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரூட்டே (Mark Rutte) மற்றும் உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வரையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில், ஆலோசனை கூட்டத்தில் ஐரோப்பா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல், ரஷ்யாவின் படையெடுப்பு, மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல், புலம்பெயர்தல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஐரோப்பியர்களாகிய நமக்கு வரலாற்றில் இது ஒரு தீர்க்கமான தருணம் என பிரான்ஸ் (France) ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) கருத்து தெரிவித்துள்ளார்.
எழவிருக்கும் அச்சுறுத்தல்
அடுத்தவர்கள் எழுதிய வரலாற்றை நாம் வாசிக்க வேண்டுமா அல்லது நாம் நமது வரலாற்றை உருவாக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், நமது வரலாற்றை நாமே உருவாக்கும் அளவுக்கான வலிமை நம்மிடம் உள்ளது என தாம் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அமெரிக்காவை சார்ந்திருப்பதை தவிர்க்குமாறு ஐரோப்பிய நாடுகளிடம் இமானுவல் மேக்ரான் கோரிக்கை விடுத்ததுடன் நமது பாதுகாப்பை என்றென்றும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவிக்கையில், தொடர்ந்து அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலை உக்ரைனுக்கு இருப்பதாகவும் அத்துடன் வலுவான ஐரோப்பாவால் ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.