வலுக்கும் மோதல்! எல்லை மீறும் கனடா – இந்தியா கடும் கண்டனம்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் (S. Jaishankar) செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு தடை செய்துள்ளது.
இந்தியா கனடா (Canada) இடையே மிக மோசமான ஒரு உறவே நிலவி வரும் நிலையில், நிலைமை மேலும் மோசமாக்கும் வகையில் கனடா இவ்வாறு செய்துள்ளமை பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இந்தியா இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இந்தியா (India) கனடா இடையே கடந்த சில காலமாகவே மிக மோசமான உறவு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு தடை செய்துள்ளது.
செய்தி நிறுவனத்திற்கு தடை
இந்த நடவடிக்கைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது அவுஸ்திரேலியா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
அங்கு அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்த அவர், விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், 15வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜெய்சங்கரின் இந்த சந்திப்பு குறித்த தகவல்களை அவுஸ்திரேலியா செய்தி நிறுவனமொன்று வெளியிட்டு இருந்தது. மேலும், கான்பெராவில் ஜெய்சங்கர் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் ஒளிபரப்பப்பட்டது.
கனடா இடையேயான உறவு
அந்த செய்தியாளர் சந்திப்பில் தான் அவர் இந்தியா கனடா இடையேயான உறவு மோசடைவது குறித்து ஜெய்சங்கர் பேசியிருந்தார். மேலும், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கியிருந்தார்.
இது குறித்த செய்திகளை அவுஸ்திரேலியா ஊடகமொன்று செய்தியாக வெளியிட்டு இருந்தது. இது நடந்து சில மணி நேரத்தில் அவுஸ்திரேலியா செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்கள் கனடாவில் முடக்கப்பட்டது. இது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “புலம் பெயர்ந்தோரின் முக்கிய ஊடகமான அந்த ஊடகத்தின் சமூக வலைத்தளப் பக்கங்கள் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
கனடாவில் அந்த ஊடகத்தின் பக்கங்களை யாராலும் பார்க்க முடியவில்லை. நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பப்பட்டு சில மணி நேரத்தில் இது நடந்துள்ளது” என்றார்.