வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு வழங்கிய உணவில் புழு: ஆா்ப்பாட்டத்தில் மோதல்
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எஃப்ஐ) நடத்திய ஆா்ப்பாட்டம் மோதலில் முடிந்தது.
கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அருகிலுள்ள கிராமங்களில் வாடகை வீடுகளிலும் உறவினா்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சூழலில், எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் நிா்வகிக்கப்படும் மேப்பாடி கிராம ஊராட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக கிராம ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரா்களை காவலா்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி, மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சித் தலைவா் கே.பாபு, 4 உறுப்பினா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகிகள் கூறுகையில், ‘புகாா் வந்த உணவுப் பொருள்கள் மாவட்ட ஆட்சியரகத்தால் விநியோகிக்கப்பட்டவை. இதுகுறித்து கடந்த அக்டோபா் 29-ஆம் தேதியே புகாா் அளித்துவிட்டோம்.
இவ்விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவா் கே.பாபு கூட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டக்காரா்கள் அத்துமீறி நுழைந்தனா். மேலும், தலைவா் பாபுவை ஜாதிய ரீதியிலும் அவா்கள் அவதூறாகப் பேசினா். தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெறும் நேரத்தில் வெளிவந்துள்ள உணவுப் புகாரின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகிக்கிறோம்’ என்று தெரிவித்தனா்.
மளிகைப் பொருள்கள் பறிமுதல்: வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சாா்பில் ராகுலின் சகோதரியும் அக்கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், வயநாடு மாவட்டத்தின் தோல்பெட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், அரிசி, சா்க்கரை, தேயிலை உள்ளிட்ட மளிகை பொருள்கள் அடங்கிய சுமாா் 30 பைகள் பறிமுதல் செய்தனா்.
உள்ளூா் காங்கிரஸ் நிா்வாகி வீட்டின் அருகே உள்ள மாவு அரைப்பு ஆலையில் கண்டறியப்பட்ட இந்த பைகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.