தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனம் (கட்டுரை)
தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனம் (கட்டுரை)
அனுரவிற்கு கடந்த காலங்களில் பயர் 🔥 விட்டுவிட்டு இப்போது அனுரவை தவிர்த்து தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்குப்போடுங்கள் என்று கேட்கிறீர்களே என்று பலரும் நினைக்கிறார்கள், கேட்கிறார்கள். இதில் என்ன சிக்கல் இருக்கிறதென்று புரியவில்லை.
ஜனாதிபதி என்பவர் நாட்டின் மாலுமி. ஜனாதிபதி சரியான திசையில் பயணித்தால்தான் நாடு சரியான திசையில் பயணிக்கும். என்னதான் நல்ல பாராளுமன்று இருந்தும் மோசமான ஜனாதிபதி இருந்தால், அப்போதும்கூட நாடு கெட்டு குட்டிச் சுவராகும்.
நாட்டிற்கு அனுர இப்போதிருக்கும் நிலையில் பெட்டரான மாலுமியாக இருக்கலாம். அனுமானம் மட்டும்தான். இன்னும் அனுர எதனையும் பெரிதாக நிரூபித்துவிடவில்லை. ஆனால் சிறுபான்மை மக்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக தமிழர்கள் அனைவரும் தத்தம் அடையாளங்களோடு பாராளுமன்றில் இருக்கவேண்டியது மிக முக்கியமானது. நேரடியாக அனுரவுடன் டீல் செய்ய முடிகிறது என்பது அனைவரும் சொல்லும் விடயம். ஆனால் அவர்கள் இந்த ஒப்ஷனை திறந்து வைத்திருப்பது, சிறுபான்மையின கட்சிகளைத் தாண்டி தங்கள் பக்கம் மக்களை இழுப்பதற்கான பொறியாகத்தானே தவிர, வேறெதற்குமல்ல.
தமிழர்களின் அரசியல் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடமும், மலையக தமிழரின் அரசியல் மலையக தமிழ் அரசியல் கட்சிகளிடமும் இருக்கவேண்டியது அவசியம். அதுதான் மத்திய அரசின் மீது சிறுபான்மையினர் மீதான அழுத்தத்தை பிரயோகித்த வண்ணம் இருக்கும். அவர்களின் பிரச்சனைகள் தொடர்பிலான கவனத்தை ஈர்த்தவண்ணமிருக்கும்.
இப்போது அவர்கள் ஒருசில இடங்களை விடுவிக்கலாம்.. ஒரு சில காவலரண்களை அகற்றலாம்.. ஆனால் இதெல்லாம் எதற்காக செய்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளக் கடினமானதல்ல.
எப்போதுமே இலங்கையில் 2/3 பெரும்பான்மையை ஒரு கட்சியிடம் வழங்குவது மிக மிக ஆபத்தானது. எதேச்சைப்போக்கான அரசாங்கமொன்றை அது ஸ்தாபித்து எதிர்கேள்விகளுக்கு மதிப்பில்லாத தளத்தை உருவாக்கிவிடும். நல்ல அரசியல் தேவையெனில் நல்லதொரு எதிர்கட்சி நிச்சயம் அவசியம். சஜித்தின் கட்சி 70+ ஆசனங்களை வெல்லவேண்டும். கூடவே சிறுபான்மை தமிழ் பேசும் கட்சிகள் 20+ ஆசனங்களை வெல்லவேண்டும். அதுதான் அனுர அரசை எப்போதும் செக் பொய்ண்டில் வைத்திருக்கும். அதுதான் அனுர அரசை பொறுப்புக்கூற வைக்கும். அதுதான் தமிழர் பிரச்சனை தொடர்பில் காத்திரமான தீர்விற்கு அவர்களை பேச்சு மேடைக்கு அழைக்கும்.
ஜனாதிபதியும், சாதாரண பெரும்பான்மை கொண்ட அரசும் ஒரே கட்சியில் இருந்தால் நாட்டின் பெரும்பாலான நல்ல விடயங்களை நிறவேற்றப் போதுமானது. அதைத்தாண்டியதொரு 2/3 பெரும்பான்மையோ, பலமான எதிர்கட்சி இல்லாத நிலையோ நாட்டின் அரசியல் களத்திற்கு அச்சுறுத்தலானது. இன்னமும் அனுர அரசின் முழுமையான முகம் யாருக்கும் தெரியவரவில்லை. அவர்கள் வெளிப்பூச்சு பூசிய அவதாரமா இல்லை இதுதான் அவர்கள் உண்மையான அவதாரமா என்பது முதலில் தெரியவரவேண்டும். அதற்கு ஓரிரு வருடங்கள் செல்லவேண்டும்.
அதுவரையில் தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனமானதும் காலத்தின் தேவையானதும்.!
மிந்தன் சிவா – அவுஸ்திரேலியா