பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
நாளை மறுதினம் வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக அனைத்துப் பாடசாலைகளும் வகுப்புகள் முடிவடைந்த பின்னர் இன்று (12) குறித்த கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (8) இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஆயத்தமாக அனைத்து பாடசாலைகளும் நாளை (நவம்பர் 13) முதல் மூடப்படும்.
அனைத்து தரப்பிற்கும் அறிவிப்பு
தேர்தல் முடிந்து பாடசாலைகள் திங்கள்கிழமை (நவம்பர் 18) திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டபங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர(J.M. Thilaka Jayasundara) அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமும் அதிபர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள்
மேலும், தேர்தல் ஆணையத் தலைவரின் கோரிக்கையின் அடிப்படையில், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.