உக்ரைனுக்கு கிடைத்துள்ள புது எதிரி., ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஆத்திரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இராணுவ உதவிகளை வழங்கும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சிமாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ரஷ்யாவின் செய்தி நிறுவனமான டாஸின் கூற்றுப்படி, புடின் நவம்பர் 9 அன்று அதில் கையெழுத்திட்டார். இதற்கு ரஷ்ய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது சட்டமாக மாறியுள்ளது.
இதையடுத்து நவம்பர் 11-ஆம் திகதி வடகொரியாவும் இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்தது. பனிப்போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மிகப்பாரிய ஒப்பந்தம் இதுவாகும்.
இதன்படி, இரு நாடுகளிலும் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால், ஒருவருக்கொருவர் ராணுவ உதவி வழங்கப்படும்.
இதையடுத்து ரஷ்யா – உக்ரைன் போரில் வடகொரியா இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு உதவ வடகொரியா 12,000 துருப்புகளை அனுப்பியுள்ளதாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் உக்ரைனின் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பியோங்யாங்கில் உச்சிமாநாட்டிற்குப் பின்னர்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக்க கூறப்படுகிறது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வட கொரிய துருப்புக்களுடன் உக்ரைன் படைகள் சிறிய அளவிலான சண்டைகளில் ஈடுபட்டன. கடந்த வாரம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் வட கொரிய வீரர்கள் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டதாகவும், அதனுடன் உக்ரைன் வீரர்கள் மோதியதாகவும் கூறினார்.
இது தவிர, 2023-க்குப் பிறகு, வட கொரியா 13,000 ஆயுத கொள்கலன்களை ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது. இதை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்துகிறது.
வட கொரியாவின் கொரிய மக்கள் இராணுவம் உலகின் மிகப்பாரிய இராணுவங்களில் ஒன்றாகும், இதில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள துருப்புகள் உள்ளன.
உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியா இணைந்தால், 1950-53 கொரிய போருக்குப் பிறகு வட கொரியா மற்றொரு நாட்டுடன் சண்டையிடுவது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான உடன்படிக்கை குறித்து அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன. வட கொரியாவின் இராணுவ உதவிக்கு பிரதியுபகாரமாக ரஷ்யா என்ன கொடுக்கும் என்பது குறித்து இரு நாடுகளும் கவலைப்படுகின்றன.
மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் வட கொரியா அணு ஆயுதங்களை உருவாக்க ரஷ்யா உதவ முடியும் என்று அமெரிக்க அமைப்புகள் அஞ்சுகின்றன.
பிப்ரவரி 2022-இல் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, வட கொரியாவுடனான உறவுகளை வலுப்படுத்த ரஷ்யா முயற்சித்து வருகிறது.