மருத்துமனையில் கத்திக்குத்து – வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மருத்துவருக்கு கத்திக்குத்து
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இன்று(13.11.2024) காலை திடீரென உள்ளே வந்த நபர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆய்வு
மருத்துவர் பாலாஜி இதயநோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து தெரியும் என கூறப்பட்டுள்ளது. சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மருத்துமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார்.மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி…
— M.K.Stalin (@mkstalin) November 13, 2024
மருத்துவரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாய்க்கு சரியான சிகிச்சை தரவில்லை என கத்தியால் குத்தியதாக தெரிய வந்துள்ளது.
வேலை நிறுத்தம்
இந்நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவ பணியாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் உடனடியாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற சிகிச்சைகள் செய்யப்படாது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மருத்துவர்களின் வேலைநிறுத்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.