;
Athirady Tamil News

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு

0

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தவர்கள்

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் புதிய தரவுகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 855 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2021 நிதியாண்டில் வெறும் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரியுள்ள நிலையில், 2023ல் இந்த எண்ணிக்கை 41,330 என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் புதிய வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பைத் தேடும் ஆசை இந்தியர்களிடையே அதிகரித்து வருவதையே இது சுட்டிக்காட்டுவதாக கூறுகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள அனைத்து இந்திய புகலிடக் கோரிக்கையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மேற்கு இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ல், தற்காப்பு புகலிடம் கோரும் ஐந்தாவது பெரிய குடிமக்கள் பட்டியலில் இந்தியர்கள் இடம் பெற்றனர். தற்காப்பு புகலிடம் என்பது ஒரு நபர் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்கொண்ட பிறகு செய்யப்படும் ஒரு வகை விண்ணப்பம்.

சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பு

2023ல் 5,340 இந்தியர்களுக்கு அமெரிக்க நிர்வாகம் அடைக்கலம் அளித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பான்மையானவர்கள் தற்காப்பு புகலிடம் (2,630) பெற்றுள்ளதாகவே கூறபப்டுகிறது.

2021ல் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். 2022ல் இந்த எண்ணிக்கை 14,570 என அதிகரித்துள்ளது. ஆனால் 2023ல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மூன்று மடங்காக அதிகரித்து 41,330 என பதிவாகியுள்ளது.

இந்திய புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உலகளாவிய குடியேற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. பலர் வேலை, பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகளைத் தொடரக்கூடிய இடமாக அமெரிக்காவை எதிர்பார்க்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.