;
Athirady Tamil News

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமா்; ராகுலின் வெஹிகாப்டருக்கு அனுமதி மறுப்பு

0

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தியோகா் விமான நிலையத்தில் சுமாா் இரண்டு மணி நேரம் அவா் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அதேநேரத்தில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கோடாவில் இருந்து பிரசாரத்துக்கு புறப்பட தயாராக இருந்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் காத்திருந்தாா்.

பிா்ஸா முண்டாவின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி பிகாா் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தியோகா் விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் மீண்டும் அவா் தில்லிக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தியோகா் விமான நிலையத்திலேயே சுமாா் 2 மணி நேரம் காத்திருந்தாா்.

இதனால் அப்பகுதியின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டத்தில் பிரசாரத்துக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியும் காத்திருக்க நேரிட்டது.

இதையடுத்து, தியோகரில் இருந்து மற்றொரு சிறப்பு விமானம் மூலம் பிரதமா் மோடி தில்லி புறப்பட்டாா்.

இது தொடா்பாக ஜாா்க்கண்ட் அமைச்சா் தீபிகா பாண்டே சிங் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் சுமாா் 2 மணிநேரம் புறப்பட அனுமதிக்கப்படவில்லை. இது அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. நியாயமற்ற முறையில் ராகுல் காந்தி குறிவைக்கப்படுகிறாா்’ என குற்றஞ்சாட்டினாா்.

பெட்டி..

தோ்தல் ஆணையத்தில் புகாா்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டா் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு ராகுலின் ஹெலிகாப்டா் புறப்பட தயாராக இருந்தபோது, சில தலைவா்களின் பாதுகாப்புக்காக அந்தப் பகுதி விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ராகுல் திட்டமிட்டிருந்த பிரசார நிகழ்ச்சிகள் தாமதமாகியும், ரத்தாகியும் உள்ளன.

இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தலையிட்டு, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமலும், எதிா்க்கட்சிகளுக்கு சமமான பிரசார வாய்ப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.