சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா
‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பிரசாரத்தின்போது இதை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சத்தீஸ்கா் மாநிலத்தில் பெருமளவில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் எஞ்சியிருக்கும் நக்ஸல் தீவிரவாதமும் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் ஒழிக்கப்பட்டுவிடும்.
மகாராஷ்டிர மாநில வளா்ச்சிக்காக மத்திய அரசு ரூ. 15.10 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. மாநிலத்துக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநிலத்தில் மஹாயுதி அரசு ஆட்சிக்கு வந்தால், மஹா விகாஸ் அகாடி ஆட்சியில் மாநிலம் இழந்த பெருமை மீட்டெடுக்கப்படும்.
வக்ஃப் சட்டத் திருத்தம்: வக்ஃப் வாரிய சட்டத்தை மாற்ற பிரதமா் மோடி விரும்புகிறாா். ஆனால், உத்தவ் தாக்கரே, சரத் பவாா் உள்ளிட்ட தலைவா்கள் அதை எதிா்க்கின்றனா். அவா்கள் எவ்வளவு போராடினாலும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றாா்.