;
Athirady Tamil News

காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!

0

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் உள்ளது.

தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமானது. தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்தும் அங்கு காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டது.

காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வரும் நிலையிலும் இன்று தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் இன்று(சனிக்கிழமை) ‘கடுமை’ பிரிவில் இருக்கிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு(AQI) 406 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாகக் காணப்படுகிறது. சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசினைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.

முறையாக சுத்திகரிக்கப்படாத தொழில்துறை கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம், வாகனங்களின் உமிழ்வு, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றால் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.

காற்று மாசினால் இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வரும்பட்சத்தில் முகக்கவசம் அணியும்படியும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தில்லியில் தற்போதுள்ள காற்று மாசு 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்கின்றனர்.

பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக தில்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.