ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால்..
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யாகூப் மன்சூரி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த அறைக்குள் நுழைந்து ஒன்றல்ல… இரண்டல்ல.. 7 குழந்தைகளை மீட்டுக்கொண்டு வந்தார்.
ஆனால், அதேப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது இரட்டைப் பெண் குழந்தைகளை அவரால் மீட்கமுடியாமல் போனதுதான் துயரம்.
ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி இதுவரை 11 குழந்தைகள் பலியாகின. தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்கும்போது, தீயில் பலியான குழந்தைகளைப் பார்த்து நெஞ்சம் உடைந்துபோயிருக்கிறார் யாகூப். தனது குழந்தைகளுக்கும், பலியான மற்ற குழந்தைகளுக்கும் நியாயம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஒரு சில நாள்களுக்கு முன்புதான், இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகியிருந்த யாகூப் மன்சூரி, தனது குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயிலில் தங்கியிருந்த போதுதான், அந்த அறைக்குள் தீப்பற்றியிருக்கிறது.
பலரும் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், அந்த அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அறைக்குள் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் ஒவ்வொருவராகத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்து, அங்கிருந்தவர்களிடம் கொடுத்தார். ஆனால், தனது குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பகுதிக்குள் பயங்கரமாக தீப்பற்றி எரிந்ததால், எனது மகள்களை மட்டும் காப்பாற்றமுடியவில்லை என்றும், அவர்களை நான் இழந்துவிட்டேன் என்றும் கூறி கதறுகிறார்.
அவரது குழந்தைகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு நியாயம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். எங்களது குழந்தைகளின் இறப்புக்கு நியாயம் வேண்டும் அவ்வளவுதான் என்கிறார் தழுதழுத்த குரலில்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மின் கசிவு காரணமாக, பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ விபத்துநேரிட்டுள்ளது. அப்போதே 10 குழந்தைகள் பலியாக, நேற்று மற்றொரு குழந்தை பலியானது.
மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டபோது, அங்கிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்து அதனால் வேகமாகத் தீ பரவியதே இந்த கொடூர விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்தப் பிரிவில் இருந்த தீயணைப்புக் கருவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாடற்றதாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.