ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து கவலை
ட்ரம்பின் வரி உயர்வு திட்டங்களால் சுவிட்சர்லாந்து அரசு கவலை அடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீதம் வரை வரி மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அதைவிட அதிகமான வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
இது சுவிட்சர்லாந்தின் வர்த்தகத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரதான வர்த்தக நாடாக அமெரிக்கா உள்ளது. சுவிட்சர்லாந்தின் பொருள் ஏற்றுமதி வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்கா வழங்குகிறது.
ஜேர்மனி, சீனா, மற்றும் பிரான்சை விட அதிகமான பங்கு அமெரிக்காவுக்கு உண்டு.
பாதிப்புகளும் எதிர்ப்பும்…
சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்கள் அதிகாரசபை (SECO) ட்ரம்பின் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துக்கு ஆபத்தானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மருந்துகள், துல்லிய கருவிகள், கடிகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்கள் இந்த வரிவிதிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.
வரி உயர்வால் சுவிட்சர்லாந்தின் பொருளாதார வளர்ச்சி 1% குறையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படின், அதை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்து யுக்திகளை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் கலந்துரையாடல்களும் நடக்கின்றன.
இந்த மாற்றங்கள் உலக வர்த்தக அமைப்பிற்கு எதிரான ஒரு அழுத்தமாக அமையும் என்று கூறப்படுகிறது.