ஜேர்மனியின் குழந்தைகள் நலனில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனி, குழந்தைகள் காப்பகங்களில் பணி செய்வதற்கு புலம்பெயர்ந்தோரை சார்ந்துள்ளது என்றால் மிகையாகாது.
125,000 பணியாளர்கள் பற்றாக்குறை
ஜேர்மனியில், பகல் நேரக் குழந்தைகள் காப்பகங்களில் 125,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆக, வெளிநாடுகளைச் சார்ந்தவர்களுக்கு குழந்தைகள் காப்பகங்களில் வேலை காத்திருக்கிறது.
பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சில காப்பகங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை சீக்கிரமே அழைத்துச் செல்லும் நிலை பல பெற்றோருக்கு காணப்படுகிறது.
சில நாட்களிலோ, காப்பகங்கள் ஒரு நாள் முழுவதும் இயங்காத நிலையும் காணப்படுகிறது.
பகல் நேரக் காப்பகங்கள் என்பவை வெறுமனே பெற்றோரின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
பகல் நேரக் காப்பகங்களில் பணியாளர் பற்றாக்குறையால் ஜேர்மனியின் பொருளாதாரத்திற்கு சுமார் 23 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த பகல் நேரக் காப்பகங்கள் என்பவை, பெற்றோர் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து தூங்க வைக்கும் இடங்கள் அல்ல.
அங்குதான் பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. பகல் நேரக் காப்பகங்களில் நல்ல ஆதரவைப் பெறும் பிள்ளைகள், பின்னாட்களில் கல்வியில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.
ஆக, பகல் நேரக் காப்பகங்களில் பிள்ளைகளுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு யூரோவும், பின்னாட்களில் நான்கு மடங்காக நாட்டின் பொருளாதாரத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.