;
Athirady Tamil News

உயர்தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

0

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் ( G.C.E. Advanced Level) போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சை திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளன.

அவசரகால ஒருங்கிணைப்பு பொறிமுறை
வங்களா விரிகுடாவில் எதிர்வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020, 0113 668 100 அல்லது 0113 668 013, 0113 668 010 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2024ஆம் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கடந்த 20ஆம் திகதி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.