;
Athirady Tamil News

சிஐடியில் பிள்ளையான் 7 மணிநேர வாக்குமூலம்

0

எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்தார்.

நேற்று (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னிலையானபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ”சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் அருட் தந்தையொருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சிஐடியில் (CID) முன்னிலையாகுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவை ஆட்சியில் அமர்த்துவதற்கு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) ஆட்சியில் அமர்த்துவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அஸாத் மௌலானா (Asad Maulana) குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் 2015 இல் நல்லாட்சி அராசங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் 2018இல் நடத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவே (SLPP) வெற்றி பெற்றது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தை 2018ஆம் ஆண்டே மக்கள் புறக்கணித்து விட்டனர்.

அந்த வகையில் 2018இல் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக யாரை நியமித்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார். மக்களின் மனநிலை அவ்வாறு தான் காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இதனை தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது. எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எனவே யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்கள் செயற்படக் கூடாது. எனக்கு எந்த பயமும் இல்லை. பழிவாங்கல் நோக்கத்துடனேயே என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர்.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றவர்களிடம் கேட்க விடயங்களை என்னிடம் கேட்கக் கூடாது. அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்.

புலனாய்வுப்பிரிவினர் ஜனாதிபதியின் கண்களைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. சிறைச்சாலையிலிருந்து கொண்டு இவ்வாறானதொரு சதித்திட்டத்தை திட்டமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை“ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.