கடந்த 48 மணி நேரத்தில் 120 பேர் வரை பலி! காசாவில் பாரபட்சமின்றி கொன்று குவித்த இஸ்ரேல்
கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதுடன் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏனையோர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்ததோடு முக்கிய மருத்துவ உபகரணங்களும் சேதமடைந்துள்ளது.
கொல்லப்பட்ட பிணைக் கைதி
இதேவேளை, வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
அதேநேரம், 200 பேர் வரை பிணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டதுடன் அதில் 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.
ஐ.நாவின் அறிக்கை
இதற்கிடையே இந்த திடீர் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது.
அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா அறிக்கை கூறியுள்ளது.