;
Athirady Tamil News

அதானியைப் பாதுகாக்கிறதா மத்திய அரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!

0

அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி கைது செய்யப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சின்ன சின்ன வழக்குகளில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அதானி போன்ற பெரிய ஊழல்வாதிகள் ஏன் சிறையில் அடைக்கப்படவில்லை?

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமம் கூறிய நிலையில், அதானியை கைது செய்யக்கோரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ராகுல்.

2020-24 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி, துறைமுகங்கள்-எரிசக்தி கூட்டுத்தாபனத்தின் நிறுவனர் தலைவர் சாகர் அதானி மற்றும் மற்றொரு முக்கிய நிர்வாகியான வினீத் ஜெயின் உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில நாள்களுக்கு முன்னா் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதானி குழுமத்தின் குற்றச்சாட்டுகளை மறுப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதானிகள் குற்றச்சாட்டுகள் ஏற்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? எந்த உலகில் நீங்கள் வாழ்கிறீர்கள்? வெளிப்படையாக, அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கப்போகிறார்.

நூற்றுக்கணக்கான மக்கள் சிறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்ற நிலையில், ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்த அதானியை கைது செய்யப்படாதது ஏன்? அதானி சிறையில் இருக்க வேண்டும். மத்திய அரசு அவரைப் பாதுகாக்கிறதா? அதானிக்கு எதிராக அமெரிக்கா லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அதானியை முதலில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

முன்னதாக, அதானியின் வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, தொழிலதிபர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும், லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்றும், யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தார்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.