வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக அரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்
தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்,
அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடனும் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனும் இன்றைய தினம் (27.11.2024) மு.ப 11. 00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்,
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பிற்கு வடிகால்கள் சிறந்த நிலையில் இல்லாமை தான் காரணம் என்றும் தாம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களை புத்திஜீவி களுடன் நேரடியாக சென்று ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக நல்லூர் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் முறையான வடிகாலமைப்பு கட்டமைப்புச் செயற்பாடுகள் இல்லாமையால் வெள்ளப் பாதிப்புக்குட்பட்டுள்ளதாகவும் இதனை தாம் நேரில் கண்டறிந்ததாகவும், எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் பல துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் பெற்று குறிப்பாக சாதாரண மக்களின் கருத்துக்களையும் கூட உள்வாங்கி சிறந்த முறையில் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்ததுடன், தற்போது அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
இக் கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் வி. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும், இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.