உயர் தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையை மீள நடாத்துவது தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள அறிவிப்பு
எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீள் ஆய்வு செய்து, தேவையான தகுந்த நிலைமைகளை அமைத்து, பின்னர் உயர்தரப் பரீட்சையை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.அதனை பரீட்சைகள் திணைக்களம் உரிய நேரத்தில் அறிவிக்கும்” என்றார்.
கடும் மழை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, இன்று, நாளை மற்றும் 29ஆம் திகதி ஆகிய மூன்று நாட்கள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி 30ம் திகதி பரீட்சை மீள நடத்தப்படும் என்றும், இடைநிறுத்தப்பட்ட மூன்று நாட்கள் தொடர்பான பாடங்கள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.