வேடிக்கை பார்வையிட வரும் மக்களால் அசௌகரியம்-நடவடிக்கை எடுப்பது யார்?
அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக நாடு பூராகவும் வெள்ள நிலை ஏற்பட்டு அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் இடைதங்கல் முகாமாக செயற்பட்ட பாடசாலைகளில் தங்கி இருந்து பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதே வேளை சில இடங்களில் பொதுமக்கள் குழுவாக பயணம் செய்து பொழுது போக்கிற்காக வெள்ள நீரை பார்வையிட வருகை தந்த சந்தர்ப்பங்களையும் காண முடிந்தது.
அம்பாறை மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது.அதில் கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதை யாவரும் அறிந்ததே.
அங்கு திடிரென வருகை தந்த மக்கள் பிரதான போக்குவரத்தை தடை செய்யும் வண்ணம் நடந்து கொண்டதுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களையும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்கினர்.குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் போக்குவரத்து பொலிஸாரோ ஏனைய பாதுகாப்பு தரப்பினரோ எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் தினந்தோறும் 1000க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வெள்ள நீரை பார்வையிட தினமும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.எனவே இனியாவது உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்படுகின்றது.