இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநருடன் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2024, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பிலும் தமது திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பித்து ஆளுநருடன் கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்கு தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கமுடியும் எனவும் ஆளுநருக்கு உறுதியளித்தனர்.
இந்தச் சந்திப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர், சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணர் பா.பாலகோபி, யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட விரிவுரையாளர், சமுதாய மருத்துவ நிபுணர் எஸ்.குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் மகப்பேற்று அறுவைசிகிச்சை நிபுணர் சி. ரகுராமன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் சிறுநீரக வைத்திய நிபுணர் பிரம்மா ஆர். தங்கராஜா, பிரபல பௌதீகவியல் ஆசிரியர் ரா.குமரன், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் ம. அருளினியன், பொறியியலாளர் ந.நந்தரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.