குடிமக்களை போருக்கு தயார்படுத்தும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து… கனடா மக்களும் தயாராக வேண்டுமா?
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாவது ஆண்டை நெருங்கும் நிலையில், ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் குடிமக்களை போருக்கு தயார் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
போர் ஏற்பட்டால் என்ன செய்வது
இந்த நிலையில், கனடாவும் குடிமக்களை போருக்கு தயார் படுத்த வேண்டுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஸ்வீடன் தாக்கப்பட்டால், ஸ்வீடனின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைவரும் தங்கள் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்வீடன் அரசாங்கத்தின் புதிய துண்டுப்பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
32 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணமானது மிக மோசமான நெருக்கடி அல்லது போர் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து விளக்குகிறது. நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணமானது ஸ்வீடனில் அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் குடியிருக்கும் வெளிநாட்டவர்கள் உட்பட 16 முதல் 70 வயது வரையான அனைவரும் ஸ்வீடனின் மொத்த பாதுகாப்பின் ஒரு பகுதி மற்றும் போர் ஏற்பட்டால் சேவை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஒரு வாரத்திற்கு போதுமான பணம், உணவு, தண்ணீர், பேற்றரி உட்பட அனைத்தும் சேமித்து வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேப்போன்ற ஒரு நடவடிக்கையை பின்லாந்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில் இருந்து உயிர்தப்பும் அத்தியாவசியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் 72 மணிநேர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். மட்டுமின்றி, நெருக்கடி நிலையில் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டி ஒன்றையும் பின்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பின்லாந்தில் வசிக்கும் 18 முதல் 68 வயதுக்குட்பட்ட அனைவரும் மீட்பு, முதலுதவி, கவனிப்பு மற்றும் தீர்வு பணிகள் அல்லது பிற சிவில் பாதுகாப்பு பணிகளில் பங்கேற்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயார் படுத்த வேண்டும்
இந்த நிலையில் கனேடிய அரசாங்கமும் 72 மணிநேர அவசரத் தேவைக்கான அனைத்தையும் கட்டமைக்கும் பொருட்டு வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூகம்பங்கள், காட்டுத்தீ, வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி விபத்துக்கள் போன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வழிகாட்டப்பட்டுள்ளது, ஆனால் போர் தொடர்பாக அல்ல.
இந்த நிலையிலேயே கனேடிய மக்களையும் போர் தொடர்பில் தயார் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் மற்றும் அண்டை நாடான பின்லாந்து போன்ற நாடுகளுக்கு தரைப் போர் அல்லது படையெடுப்பின் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக உள்ளது.
ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்பதே முதன்மை காரணம். மட்டுமின்றி, 1940களில் ரஷ்யாவுடனான போரின் போது மொத்த மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை பின்லாந்து முன்னெடுத்துள்ளது.
அதனால், அவர்களுக்கு அந்த அனுபவம் உள்ளது. ரஷ்யாவால் கனடாவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றே நிபுணர் ஒருவரின் கருத்தாக உள்ளது. அதனால், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போன்ற போருக்கு ஆயத்தமாகும் நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் முன்னெடுக்கவும் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.