திருநெல்வேலி கலாசாலை வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள மக்கள்!
திருநெல்வேலி கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும் , வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடியபாதம் வீதியில் இருந்து, கோப்பாய் இராச பாதை வீதி வரையிலான 1.515 கிலோ மீற்றர் தூரமான கலாசாலை வீதியினை காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கான பணிகள் கடந்த 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்தன.
யாழ்ப்பாணத்தில் கடுமையாக பெய்த மழை காரணமாக அப்பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் மீளவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 03ஆம் திகதி முதல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை(06) வரையில் காலை 08.30 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் வீதி மூடப்பட்டு காப்பெட் இடும் பணிகளுக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஆடியபாதம் வீதியில் இருந்து கலாசாலை வீதியின் நான்காம் ஒழுங்கை வரையிலான சுமார் 250 மீற்றர் தூரமான வீதி காப்பெட் இடப்படாமல் , வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கேட்ட போது , காப்பெட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இவ்வளவு தூர வீதியினையே செய்ய முடிந்தது மிகுதி வீதி இனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்திலேயே காப்பெட் இட ப்படும் என தெரிவித்துள்ளனர்
எங்களுடைய வீதி காப்பெட் வீதியாக புனரமைக்கப்படுகிறது என்பதால் தான் கடந்த மூன்று தினங்களாக வீதி மூடப்பட்டு இருந்த போதிலும் , சிரமங்களை சகித்து கொண்டோம். தற்போது வீதி பூரணமாக புனரமைக்காது இடை நடுவில் வேலையை முடிவுறுத்தி சென்றுள்ளனர்.
வீதி காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கு வீதியினை அகலமாக்கி , கற்கள் பரவப்பட்டு வீதி ஓரங்களில் கற்குவியல்கள் குவிக்கப்பட்டு காணப்பட்டது. இவர்கள் இடை நடுவில் விட்டு சென்றமையால் வீதி முதல் இருந்ததை விட மிக மோசமாக காணப்படுகிறது
கலாசாலை வீதியில் தான் யாழ் . பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் , பாற்பண்ணை என்பவை உள்ளத்துடன் , திருநெல்வேலி சந்தைக்கு கோப்பாய் , நீர்வேலி பகுதிகளில் இருந்து இந்த வீதியூடாகவே பலரும் போக்குவரத்து செய்வதனால் குறித்த வீதியினை முழுமையாக புனரமைத்து தருமாறு கோரியுள்ளனர்.
வீதியினை இன்னமும் புனரமைக்க சுமார் 250 மீற்றர் தூரம் மட்டுமே காணப்படுவதனால், அதனை அதிகாரிகள் யாரும் கவனத்தில் எடுத்து, அவற்றுக்கு இனி புதிதாக நிதி ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனவே இந்த வீதியினை முழுவதுமாக புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை , வீதியின் புனரமைப்பு பணியின் போது , வீதி முழுவதுமாக அளவு எடுக்கப்பட்டு , அதற்கான செலவீனம் மதிப்பீடு செய்யப்பட்டே பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் வீதியின் மட்டம் (லெவெலிங்) எவையும் மதிப்பீடு செய்யப்படாமல் , பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையால் , காப்பெட் அளவு அதிகரித்தால் தான் வீதியினை முழுமையாக புனரமைக்க முடியாது சுமார் 250 மீற்றர் தூர வீதிக்கான காப்பெட் முடிவடைந்ததால் தான் அவை இடையில் நிறுத்தப்பட்டுள்ளது என மக்கள் சந்தேகமும் தெரிவித்தனர்.
அதேவேளை இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் , மாவட்ட செயலர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் தாம் கொண்டு சென்றுள்ளதாகவும் , தெரிவித்தனர்.