தில்லி மூவர் கொலையில் திடீர் திருப்பம்: துல்லியமாக திட்டமிட்ட கொலையாளி! காட்டிக்கொடுத்த தடயம்!!
தில்லியில் நேற்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக 20 வயது தில்லி பல்கலையில் படிக்கும் அவர்களது மகன் அர்ஜுன் தன்வார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெப் சராய் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார், இவர்களது கொலை தில்லியை உலுக்கிய நிலையில், நடைப்பயிற்சி சென்று திரும்பிய மகன், குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின.
உண்மையில், இந்தக் கொலையை, அவர்களது மகன் அர்ஜுன்தான் மிகத் துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருப்பதை முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மேலும் முதலில் தான் மிகவும் அப்பாவி போல நடித்ததாகவும், விசாரணையை திசைத்திருப்ப முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
குற்றவாளியை கைது செய்திருக்கும் காவல்துறையினர், அர்ஜுன், தனது தந்தை ராஜேஷ் குமார் (51), தனது மொத்த சொத்தையும் அக்கா கவிதாவுக்கே எழுதிக்கொடுக்க முடிவெடுத்திருந்த நிலையில், இந்தக் கொலைகளை நிகழ்த்தியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அர்ஜுன், குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட முயன்றது, அவரது தந்தைக்குப் பிடிக்காததால், தொடர்ந்து தந்தை அர்ஜுனை பலரது முன்னிலையில் திட்டுவதும், மரியாதைக்குறைவாக நடத்துவதும் தொடர்ந்திருக்கிறது. இதனால், அர்ஜுனுக்கு தந்தை மீதான வெறுப்பு அதிகரித்து, அது நாளடைவில் கொலை செய்யும் அளவுக்கு அவரை மாற்றியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதாவது, கொலை செய்யும்போது மூவரும் கத்தக்கூடாது என்பதற்காக முதலில் அவர்களது தொண்டையை அறுத்துள்ளார் அர்ஜுன். தந்தை மீது இருந்த கடுமையான வெறுப்பினால் அவரது தலையில் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறார். அவரது பலமான தாக்குதலில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்கள்.
திட்டமிட்டப் படுகொலை
அதாவது ஒரு கொலையை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிட்டு மிகத் துல்லியமாக காரியத்தை செய்துமுடித்திருக்கிறார். புதன்கிழமை அதிகாலையில் கொலையை செய்த அர்ஜூன், அதன் பிறகு அவர் வழக்கமாக என்னென்ன செய்வாரோ அத்தனையும் செய்திருக்கிறார். 5.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பு நடைப்பயிற்சி சென்றிருக்கிறார்.
நடைப்பயிற்சி சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓடிச் சென்று தான் பணியாற்றும் உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளரிடம் கூறியிருக்கிறார். அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். யாருக்குமே அவர் மீது துளியும் சந்தேகம் வராத வகையில்.
ஆனால், காவல்துறையினர் அவரிடம் உரிய முறையில் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தபோதுதான் சிக்கிக்கொண்டுள்ளார்.
மாடிப்படியில் ராஜேஷ் உடல் இருந்திருக்கிறது, 46 வயது கோமல் மற்றும் மகள் கவிதாவின் உடல்கள் கீழ்தளத்தில் ஒரே அறையில் இருந்துள்ளது.
இதில் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய ஒரே விஷயம் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில், கத்திக் குத்து காயம் இருந்த இடங்களைச் சுற்றிலும் துணிகளை வைத்து, ரத்தம் வெளியேறாத வகையில் தடுக்கப்பட்டிருந்தது.
அக்கா கவிதாவின் உடலில் இருந்த காயங்களைப் பார்க்கும்போது, அவர் அர்ஜூனுடன் கடுமையாகப் போராடி இருப்பதைக் காட்டுவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
ராணுவத்தில் பணியாற்றியபோது தந்தை பயன்படுத்தியக் கத்தியைக்கொண்டு இந்தக் கொலைகளை அர்ஜூன் செய்திருக்கிறார்.
குத்துச்சண்டை பயிற்சியாளரான அர்ஜூன், தில்லி அணிக்காக போட்டிகளில் பங்கேற்று விருதுகளை வென்றவர். இவர் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார். கவிதா முதுகலை பயில்வதால் தந்தைக்கு மிகவும் செல்லப்பெண்ணாக இருந்துள்ளார். தான் தனித்துவிடப்பட்டதாகவும் அர்ஜூன் நினைத்திருக்கிறார்.
கடந்த 1ஆம் தேதி கவிதாவின் பிறந்தநாள் அன்றும் அர்ஜூன் குடும்பத்தாருடன் சண்டைபோட்டு அவர்களை தாக்கியிருக்கிறார்.
தற்போது அர்ஜூன் கைது செய்யப்பட்டு அவரது செல்போன் ஆராயப்பட்டு வருகிறது. அவர் எவ்வாறு திட்டமிட்டு இந்தக் கொலைகளை செய்தார் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.