மகாராஷ்டிரம்: எம்எல்ஏவாக பதவியேற்ற ஃபட்னவீஸ், ஷிண்டே, பவார்!
மகாராஷ்டிர மாநில முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மூன்று நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாள் தொடங்கியதும், தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகிய மூன்று தலைவர்களுக்கும் சட்டப்பேரவையின் இடைக்கால தலைவர் காளிதாஸ் கொலம்ப்கர் பதவிப் பிரமாணம் வைத்தார்.
மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 287 எம்எல்ஏக்களுக்கும் இடைக்கால தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
முன்னதாக நவம்பர் 20 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் நவம்பர் 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் மகாயுதி கூட்டணி 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர் சிக்கில் நிலவிவந்ததையடுத்து, பொறுப்பு முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே பதவி விலகியதையடுத்து, குழப்பம் தீர்ந்தது. இதையடுத்து பாஜக உயர்நிலை தலைவர்கள் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் அடுத்த முதல்வராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேநிலையில், துணை முதல்வர்கள் யார் என்று கடைசி நிமிடம் வரை குழப்பம் நிலவி வந்த நிலையில், பதவியேற்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக துணை முதல்வர்கள் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், டிசம்பர் 5ம் தேதி முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வர் பதவியை வகிக்கிறார் தேவேந்திர ஃபட்னவீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.