சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.., விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி பதில்
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விஜய், “மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணியை நம்பியிருக்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.
இந்நிலையில், விஜயின் விழா குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை” என்று கூறினார்.
அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மன்னர் ஆட்சி நடப்பதாக கூறிய கருத்துக்கு, “தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகியுள்ளார்” என்றார்.