பிரித்தானியாவில் தொடர்ந்து வாழமுடியுமா? கேள்விக்குறியுடன் காத்திருக்கும் 1,000 புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவில், தங்கள் விசா நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தெரியாமல், சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் கேள்விக்குறியுடன் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கேள்விக்குறியுடன் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்
காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ அனுமதி கிடைக்கும் முன், புலம்பெயர்ந்தோரில் பலர் 30 மாதங்களுக்கொருமுறை தங்கள் விசாவை நீட்டிப்பதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.
அதற்காக ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகும் நிலையில், பலருக்கு உள்துறை அலுவலகத்திலிருந்து தங்கள் விண்ணப்பத்தில் நிலை குறித்து இன்னமும் பதில் வரவில்லை.
பொதுவாக இத்தகைய விண்ணப்பங்களுக்கு உள்துறை அலுவலகம் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவேண்டும்.
ஆனால், 902 புலம்பெயர்ந்தோர், தங்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்துவிட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், தங்கள் விசா நீட்டிக்கப்படுமா இல்லையா என தெரியாத நிலையில், இவர்கள் தங்கள் வேலையை இழக்கவும், அவர்களுக்குக் கிடைக்கும் நிதி உதவிகள் இடைநிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதால், கடன் வாங்கி அவதியுறும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு முறை விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க, விசா வகையைப் பொறுத்து, 1,035 பவுண்டுகள் முதல் 1,258 பவுண்டுகள் செலவிடவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.